Monday, January 29, 2018

உன்னிலே என் எண்ணம் நிலைய





உன்னிலே என் எண்ணம் நிலைய 
அருள் கொடு..அன்னையே...
மண்ணிலே என் ஆவல் முடிய  
மனம் கொடு என் அன்னையே ...

...உன்னிலே..

இருள் எது ஒளி எது என் 
இதயம் வேண்டும் பொருள் எது ?
இனி இது அது என் நாடா நிற்கும் 
இதய வலிவு தந்திடு. 

......உன்னிலே...

பாலை நீரிலிருந்து பிரிக்கும் 
தந்திரமென்ன சொல்லிடு.  ..அலை 
பாயும் மனமும் பொய் தவிர்க்க 
மந்திரமும் தந்திடு. 

......உன்னிலே .....




Monday, January 22, 2018

நெஞ்சமர் நாயகி



உன்னருளாலே நான் உயிர் வாழ்கின்றேன்
உன்னையே எந்தன் உறவாய்க் கொண்டேன்
(உன்னருளாலே)

அன்னை என உனைப் பணிந்தேன்
அஞ்சேல் என மனம் கனிந்தாய்
கொஞ்சம் கொஞ்சம் உனை நினைந்தேன்
கொஞ்சி மனம் குழைந்தாய்
(உன்னருளாலே)

சங்கடம் தீர்த்திடுவாய் சங்கரன் நாயகியே
பொங்கிடும் அருட்கடலே புங்கவனின் துணையே
வெஞ்சமர் வாழ்வினிலே நெஞ்சமர் நாயகியே
செஞ்சுடராய் எழுந்து இருள் கிழி பூவிழியே



--கவிநயா

Monday, January 15, 2018

ஒவ்வொரு நாளும்...

சுப்பு தாத்தா தேஷ் ராகத்தில் மிகவும் உருக்கமாகப் பாடியிருப்பது இங்கே: மிக்க நன்றி தாத்தா!





கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

ஒவ்வொரு நாளும் ஒரு தரமேனும்
உன்னிரு பாதம் பணிந்திடவும்
ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும்
உன்திரு நாமம் பயின்றிடவும்

அருள் புரிவாயே என் அன்னை நீயே
உன்னை விட்டால் எனக்கெவருண்டு தாயே?
கருணை முகிலே அருளைப் பொழிவாய்
கதியென வந்தேன் காப்பாற்ற வருவாய்

நாவினில் உந்தன் நாமம் விதைத்தேன்
உள்ளத்தில் உன்னைப் பயிராய் வளர்த்தேன்
அன்பின் ஊற்றாய் என்னுள் வருவாய்
அருளின் வடிவாய் என்னுள் ஒளிர்வாய்

உன்திருவடியில் வளரும் அன்பும்
உன்திருநாமத்தில் நாவிற்கு ருசியும்
சுவாசந்தோறும் உந்தன் நினைவும்
தந்தருள்வாயே என் அன்புத் தாயே!


--கவிநயா


Tuesday, January 9, 2018

விளையாட்டை விடுவாய்!


சுப்பு தாத்தா வின் உருக்கமான இசையில், குரலில், அடானா ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!
கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
கீதாம்மா வின் இனிய குரலில், இன்னொரு ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

உலகேழும் படைத்தாயம்மா, அதிலுன்
மாயை தனை விதைத்தாயம்மா

உன் மாயா விளையாட்டில் சிக்கி விட்ட போதும்
உன்னடியைச் சிக்கெனவே பிடித்தேனே நானும்

உந்தன் விளையாட்டு எந்தன் வினையாகும்
எந்தன் வினையாவும் என்விதியின் துணையாகும்

விளையாட்டை விடுவாயம்மா, என்
வினையெல்லாம் அழிப்பாயம்மா

அம்மா என்றழைத்தேன் எனினும் இரங்காயோ?
துன்பம் எனை மறக்க துணை நீ புரியாயோ?

கண்ணீர் வழிந்தாலும் கருணை பிறவாதோ?
பன்னீரோ உனக்கு, பாசம் தெரியாதோ?

விளையாட்டை விடுவாயம்மா, என்

வினையெல்லாம் அழிப்பாயம்மா


--கவிநயா

Monday, January 1, 2018

என் சொத்து

அனைவருக்கும் மனம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்!


சுப்பு தாத்தா வின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

அம்மா உந்தன் பெயரை நானும்
சொல்லிச் சொல்லிப் பார்க்கின்றேன்
உன்னை எந்தன் நெஞ்சில் வைத்து
எண்ணி எண்ணிச் சேர்க்கின்றேன்

சொந்தம் எல்லாம் நீதானே, என்
சொத்தும் சுகமும் நீதானே
பந்தம் பாசம் நீதானே, என்
வாழ்வில் வந்த செந்தேனே

வானம் போல விரிந்திருக்கும்
நெஞ்சத்தன்பு உனதம்மா
கடலைப் போலே கருணை பொங்கும்
கண்ணாயிரமும் உனதம்மா

மலரின் வண்ணம் உனதம்மா, அம்
மலரின் மணமும் உனதம்மா
இயற்கை எல்லாம் நீயம்மா, அதன்
உயிரும் உணர்வும் நீயம்மா


--கவிநயா