Monday, April 25, 2016

எல்லாம் உன்னாலே!





ஷண்முகப்ரியா ராகத்தில் சுப்பு தாத்தாவின் அன்புக் குரலில்... மிக்க நன்றி தாத்தா!
 

எல்லாம் உன்னாலே,

எதுவும் இல்லை தன்னாலே!

(எல்லாம்)



அணுவும் அசையும் உன்னாலே!

அண்டம் அடங்கும் உன்னாலே!

நீரும் நிலமும் உன்னாலே, அந்த

நிலவும் மலரும் உன்னாலே!

(எல்லாம்)



காயும் கனியும் உன்னாலே!

கனியின் விதையும் உன்னாலே!

விதைக்குள் மரமும் உன்னாலே, அந்த

மரத்தின் உயிரும் உன்னாலே!

(எல்லாம்)



மனித இனமும் உன்னாலே!

மனித மனமும் உன்னாலே!

மனதின் மயக்கம் உன்னாலே, அந்த

மயக்கம் தெளிதல் உன்னாலே!

(எல்லாம்)



ஐம் பூதங்கள் உன்னாலே!

ஐம் புலன்களும் உன்னாலே!

புல னடங்குதல் உன்னாலே, நீ

புலப் படுவதும் உன்னாலே!

(எல்லாம்)



வினையும் பயனும் உன்னாலே!

பிறவி பலவும் உன்னாலே!

உனை நினைப்பது உன்னாலே, உன்

அருள் கிடைப்பதும் உன்னாலே!!

(எல்லாம்)


--கவிநயா

Monday, April 18, 2016

சொக்கத் தங்க மீனாள்!


மாநகராம் மதுரையினை
ஆள வந்த மீனாட்சி!
மக்கள் மனம் எங்கும் இன்று
அவளுடைய அரசாட்சி!

கோல மயில் போல எழில்
கொஞ்சும் அவள் திருக்காட்சி!
கொண்டவனின் துணையுடனே
புரிந்திடுவாள் அருளாட்சி!

கொண்டை முடி அலங்கரித்து
கோதையவள் வீற்றிருப்பாள்!
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கனிவுடனே காத்திருப்பாள்!

காண வரும் பக்தருக்கு
கண்டவுடன் அருள் புரிவாள்!
கண்டு கொண்ட அடியவரின்
இதயத்திலே குடியிருப்பாள்!

கண்விழியால் காப்பவளாம்
கனிமொழியாள் மீனாளாம்!
விண்ணவரெல்லாம் போற்றும்
கண்மணியாம் மீனாளாம்!

வளைக்கரத்தில் வாளெடுத்து
போர் தொடுத்த மீனாளாம்!
சொக்கனிடம் சொக்கி நின்ற
சொக்கத் தங்க மீனாளாம்!



--கவிநயா 


Monday, April 11, 2016

தாமதம் ஏனோ?

தாமதம் ஏனோ
தயை புரிய, அருள?
தரணியெல்லாம் காக்கும்
தாயுன் உளமிரங்க?
(தாமதம்)

பலப் பலவாய்ப் பிறந்தேன்
பவவினையில் உழன்றேன்
கதிநீ யென உணர்ந்தேன்
காலடியில் விழுந்தேன்
(தாமதம்)

விளையாட்டாய் இந்த உலகினை நீ படைத்தாய்
விளையாடி மகிழ பொம்மைகள் பல தந்தாய்
மாயையினில் மயங்கி உனை மறத்தல் தகுமோ?
அன்னையுன் அருளென்றென் இதயத்தில் ஒளிர் விடுமோ?


--கவிநயா 



Monday, April 4, 2016

எனக்கும் அருள்வாயோ?


தர்மாவதியில் சுப்பு தாத்தா இனிமையுடன் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



எனக்கும் அருள்வாயோ?

மயக்கம் களைவாயோ?

(எனக்கும்)



தூய உள்ளந் தன்னைத் தருவாயோ?

அதில் தங்கிக் குடியிருக்க வருவாயோ?

நேயங் கொண்ட பிள்ளை அறியாயோ?

உன் மாயம் விட்டு அருள் புரியாயோ?

(எனக்கும்)



தாயே எந்தனுயிர் நீயே என்று தினம்

கூவும் பிள்ளை குரல் கேளாயோ?

நாயேன் எனினும் உந்தன் சேயே நானும்

எனும் நேசம் கொண்டு என்னைப் பாராயோ?

(எனக்கும்)


--கவிநயா