Tuesday, September 30, 2014

நவராத்திரி நாயகி !





நவராத்திரி நாயகி !


நவராத்திரி நாயகி !உன்னை நாடி வந்தோம் .
புவனேஸ்வரி !உந்தன் புகழ் பாடவந்தோம் .
துட்டரைத்துணிக்கும்  துர்க்கையாய்ப் போற்றித் 
துதித்துத் தாயுன்னைக் கொண்டாடவந்தோம் .


பண்டகனாம்  குரோத வடிவான  அசுரனைக் 
சங்காரித்தவளே !லலிதா திருபுரசுந்தரி  !
அஞ்ஞான அந்தகார வடிவான அசுரனாம் 
பந்தகனைத்துணித்த  காஞ்சி காமாட்சி !
நவராத்திரி நாயகி !உன்னை நாடி வந்தோம் .
புவனேஸ்வரி !உந்தன் புகழ் பாடவந்தோம் .
துட்டரைத்துணிக்கும்  துர்க்கையாய்ப் போற்றித் 
துதித்துத் தாயுன்னைக் கொண்டாடவந்தோம் .


மகிடாசுரனை மர்த்தனம் செய்தவளே !
மகேஸ்வரி !அன்னையே!அகிலாண்டேஸ்வரி !
தயாபரி ! தாயே ! மலைமகளே !மாயே !
ஜெயஜெய,ஜெயஜெய ஜெகதீஸ்வரி !
நவராத்திரி நாயகி !உன்னை நாடி வந்தோம் .
புவனேஸ்வரி !உந்தன் புகழ் பாடவந்தோம் .
துட்டரைத்துணிக்கும்  துர்க்கையாய்ப் போற்றித் 
துதித்துத் தாயுன்னைக் கொண்டாடவந்தோம் .

Thursday, September 25, 2014

நவராத்திரி நாயகிக்குப் பாமாலை


நவராத்திரி நாயகிக்குப் பாமாலை 


வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .


[1] துர்க்கையாய்த்  தாயை அலங்கரிப்போம் .
     சொர்க்கமாய்  வாழ்வில் சுகந்தருவாள் .
     துஷ்டரை  மாய்க்குந்திறமருள்வாள் .
     கஷ்டங்கள் யாவுங் களைந்திடுவாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல்  பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .


[2]லக்ஷ்மியாய்  அன்னையை அலங்கரிப்போம் .

    அக்ஷய பாத்திரமாய்  அளித்திடுவாள் .
   செல்வவளத்தோடு  பாரியென 
   வள்ளல்குணமும்  நமக்கருள்வாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .


[3]வாணியாய்த்  தேவியை அலங்கரிப்போம் .
    ஞானம் தந்து  மருள் நீக்கிடுவாள்.
    கலைகளில்  வல்லவராக்கிடுவாள் .
    நலமான வாழ்வினை நமக்கருள்வாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே 
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .

Tuesday, September 23, 2014

ஏனிந்தப் பாராமுகம் ?





ஏனிந்தப் பாராமுகம் ?


ஓயாமல் ,"அம்மா ! அம்மா !"
                எனக்கூவி அழைத்திருப்பேன்,
தாயுந்தன்  திருவடியை 
                 உடும்பாகப் பிடித்தபடி .
                 .
வாஞ்சையும் , தாயன்பும் 
                    ஆதரவும் , அரவணைப்பும்
நோஞ்சான் பிள்ளைக்கே அதிகத்
                    தேவையன்றோ தாயே ?
ஞானத்தில் நோஞ்சானாய்
                  நான் நலிந்து கிடக்கையிலே
 ஏனிந்தப் பாராமுகம் 
           என்றுனை நியாயம் கேட்க ,
ஓயாமல் "அம்மா ! அம்மா !"
                எனக்கூவி அழைத்திருப்பேன்,
தாயுந்தன்  திருவடியை 
                 உடும்பாகப் பிடித்தபடி .



பிழை கண்டால் குழந்தை எனைக்
           குட்டிவிடு ,குனிந்திடுவேன்;
தவறு கண்டால் தகுந்ததொரு 
           தண்டனை தா,தாங்கிடுவேன்.
மரணத்தினுங் கடுமையான 
             கொடுந்தண்டனையாமுந்தன் 
மௌனத்தால் தண்டித்தல்
            முறையோ என்றுனைக் கேட்க,
ஓயாமல் "அம்மா ! அம்மா !"
                எனக்கூவி அழைத்திருப்பேன்,
தாயுந்தன்  திருவடியை 
                 உடும்பாகப் பிடித்தபடி .






Tuesday, September 16, 2014

ஒரு நாளும் உனை மறவேன்!

சுப்பு தாத்தா அடான ராகத்தில் அருமையாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



ஒரு நாளும் உனை மறவேன் அம்மா
திருத் தாள்கள் உளம் பதித்தேன் அம்மா
(ஒரு நாளும்)

உன் நாமம் தினம் ஓதி உந்தன் புகழ் பாடிடுவேன்
ஓயாமல் உனை நினைந்தென் உள்ளத்தில் கொண்டாடிடுவேன்
(ஒரு நாளும்)

பனிமலரே உந்தன் பதமின்றி கதியேது?
கனிவிழியே உந்தன் அருளின்றி வழியேது?
மலையரசன் மகளே நீயின்றி உலகேது?
உனையன்றி துணையேதும் எனக்கிங்கு கிடையாது !
(ஒரு நாளும்)


--கவிநயா

பி.கு. பதிவிட நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தேன். இங்கு (அமெரிக்க) செவ்வாய் முடிவதற்குள்ளாகவாவது இட்டு விடத்தான்  எண்ணியிருந்தேன். அதற்குள் லலிதாம்மா இட்டு விட்டார்கள். பரவாயில்லை; நன்றி லலிதாம்மா. உண்மையில் அடுத்த வாரத்திலிருந்துதான் உங்கள் உதவி தேவை. ஊருக்குப் போவதால் இப்போது முதல் இன்னும் 4 செவ்வாய்க் கிழமைகளுக்கு பதிவிட இயலாது என நினைக்கிறேன். நன்றி அம்மா.



தயங்குவதேன் தாயே?


தயங்குவதேன்  தாயே?

தூய்மை கெடுமென அஞ்சிச் சேற்றினில்
தாமரை பூத்திடத் தயங்கிடுதோ ?
அன்னையே!உன்பதத் தாமரை எந்தன்
சென்னியில் மலர்ந்திடத் தயங்குவதேன் ?

கறையுற்ற நிலவினில் குறைகாணாமல்
சிரந்தனில் சூடிய  ஜகத் ஜனனி!
அருகதையற்றவளாயினும் எந்தன்
சிரந்தனில் திருவடி பதித்தருள் நீ!

பாமர தாசனைப் பாவலனாக்கிய
சாமளையே! என் கோரிக்கை கேள்!
தரம்,தகுதி யேதும் தேடாமலெந்தன்
சிரந்தனில் பதித்தருள்வாய் பூந்தாள்!

ஓடேந்தித்திரியும் பிச்சாண்டிப்பித்தனை
நாடி மணங்கொண்ட நாரிமணி!
ஞானசூனியன் நாடிவந்தேனுனை ,
ஞானப்பிச்சை  ஈந்தருள்வாய் நீ !

[அம்மன் பாட்டு வலை  கவிநயாவின் செவ்வாய் பக்திப்பாடல்  இன்றி 'வெறிச்'சென்று இருக்கக்கண்டு தாங்காததால் ஏற்பட்ட விளைவு இந்தப் பாட்டு ]

Monday, September 8, 2014

அனைத்தும் நீ!



நம் அன்பிற்குரிய சுப்பு தாத்தா அருமையாகப் பாடியிருப்பது இங்கே... மிகவும் நன்றி தாத்தா!



ஓம்கார ரூபிணி சம்ஹார சூலினி
ஆங்கார காளிநீ காருண்ய தேவிநீ!

அண்டங்கட் கன்னைநீ ஆதிசிவ சக்திநீ
ஆகாய கங்கைநீ ஆனந்த மோகினீ!

காலத்தின் மூலம்நீ மூலத்தின் முதலும்நீ
முதலாகி முடிவாகி மேவுங்கருங் காளிநீ!

வானத்தின் நீலம்நீ தேனுக்குள் சுவையும்நீ
ஊனாகி உருவாகி உயிரான தாயும்நீ!

வேதத்தின் வேரும்நீ வேரான வித்தும்நீ
வித்தாகி விளைவாகும் விந்தைமிகு சக்திநீ!

மத்தான மோகம்நீ ததியான வாழ்வும்நீ
முத்தாகி ஒளியாகி முகிழ்க்கின்ற ஞானம்நீ!
 
கல்லாத கல்விநீ சொல்லாத பொருளும்நீ
வில்லாகி அம்பாகி விரைகின்ற அருளும்நீ!

கண்ணான கண்மணீ பொன்னான பெண்மணீ
விண்ணாகி மண்ணாகி விகசிக்கும் பூரணீ!

தாயே எந்நாளும்நீ துணையாக வேணும்நீ
மாதே என்காவல்நீ மாசக்தி தேவிநீ!


--கவிநயா

Monday, September 1, 2014

உனையன்றி எவருண்டு?


மிகப் பொருத்தமான ராகத்தில் மிக இனிமையாக சுப்பு தாத்தா பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



உறவென உனைக் கொண்டேன் உமையவளே
உரவுண்ட கண்டனுக்கு இமையவளே
(உறவென)

உறவுகள் பலவற்றை உலகினில் நீ தந்தாய்
ஒவ்வொன்றும் நீயாகி உள்நின்று அன்பு செய்தாய்
(உறவென)

பலதாய் கருவினில் பலப்பலவாய்ப் பிறந்தேன்
ஒரு தாய் என்றென்றும் நீயெனெவே உணர்ந்தேன்
என்தாய் உன் பதங்கள் முழுதாய் சரணடைந்தேன்
எனதாய் உனை நினைந்து தினந்தினமுந் தொழுதேன்
(உறவென)


--கவிநயா